Pages

Monday, August 14, 2023

RAMAYANAM PART 18

 இராமாயணம் தொடர் 18

இராமரிடம் பரசுராமர் தோல்வியடைதல்

🌸 பரசுராமரை எதிரே பார்த்ததும் தசரதன் கலங்கிப் போனான். சத்திரியர்களை வேரோடு அழிக்கும் இந்த பரசுராமன், தனது குமாரன் இராமனை ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயம் தசரதனுக்கு வந்தது. எதிரே வரும் பரசுராமரை யாரோ என்று எண்ணி இராமனும், பரசுராமனைப் பணிந்து வணங்கினார். பரசுராமனோ கோபம் தணியாமல், 'இராமா! பழுதுபோன சிவதனுசை ஒடுத்ததால், நீ வீரனாகிவிட முடியாது. நீ வீரன் என்றால் வந்து என்னுடன் போரிடு" என்றான். அதற்கு தசரதன், பரசுராமா! உனக்கு சாதாரண மானுடர்களாகிய நாங்கள் சமமா?. உன் வீரத்தை பற்றி அனைவருக்கும் தெரியும் தானே. இராமனோ இளம் பாலகன். இராமன் அறிந்தும் அறியாமையாலும் ஏதாவது பிழை செய்திருந்தால் கோபத்தை தணித்து பொருத்தருளுவாய் என்றான். இவ்வாறு தசரதன் பலவாறாக கெஞ்சி அழுது முயற்சித்தான்.

🌸 அதற்கு அசட்டை செய்யாமல் பரசுராமன், இராமன் முறித்த சிவதனுசு பழுதுபட்டது என்றும், இராமனால் முடிந்தால் என் கையிலிருக்கும் விஷ்ணு தனுசை முறித்து இராமன் வீரன் என்று நிரூபித்துக் காட்டட்டும் என்றான். இராமர், பரசுராமர் கையிலிருந்த விஷ்ணுதனுசை வாங்கி அதை வளைத்து, நாண் பூட்டினார். அம்பை குறிபார்த்து, 'பரசுராமரே! நீர் ஜமதக்னியின் புதல்வன். தவம் மேற்கொண்டவன். உம்மைக் கொல்லல் தகாது. ஆனால் நான் இந்த அம்பை வில்லில் பூட்டி விட்டால் அதற்கு ஓர் இலக்கு வேண்டும் அல்லவா? இப்போதே சொல் என் அம்புக்கு எது இலக்கு?" என்றான் இராமன். பரசுராமர் திகைத்தார். இராமா! நீ யார் என்பதை நான் புரிந்து கொண்டேன். இராம பாணத்திற்கு இலக்காவது யார்? இராமா! உன் அம்புக்கு என் தவத்தின் வலிமையை தருகிறேன் என்று சொல்லி வில்லை தளர்த்தினான். பின்னர் பரசுராமன் இராமனை வாழ்த்தி வணங்கி விடைபெற்றுச் சென்றான். பரசுராமரை மீண்டும் தவம் செய்ய செல்லுமாறு இராமர் கூறினார். இராமருக்கு சக்தி வாய்ந்த கோதண்டம் கிடைத்தது. இராமரை தொழுது விடை பெற்று சென்றார், பரசுராமர்.

🌸 மயங்கி வீழ்ந்த தசரதனை இராமர் தேற்றி எழுப்பினான். பரசுராமனால் இராமனுக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை என்பதை அறிந்தும், பரசுராமன் இராமனால் தோல்வியடைந்ததை அறிந்து தசரதன் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அனைவரும் அயோத்தி நகர் சென்றடைந்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

🌸 கைகேயின் சகோதரர் யுதாசித்து வந்து, தம் தகப்பனார், தன் பேரன்களை பார்க்க விரும்பியதால் அவர்களை அழைத்துவர சொன்னதாக கூறினான். கைகேயி சகோதரரின் அழைப்பின் பேரில் பரதனையும் சத்ருக்னனையும் கேகய நாட்டுக்கு அனுப்பி வைத்தார், தசரதன். தசரத சக்ரவர்த்தி நாட்டை அமைதி பூங்காவாகவும், அறநெறியுடன் ஆட்சி புரிந்து வந்தார். மக்களும் எவ்வித பிரச்சனை இன்றி, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இராமர் அதிகாலையில் எழுந்து நீராடி தன் நித்திய வழிபாடுகளை முடித்து தாய் தந்தையர் மற்றும் தன் குருவாகிய வசிஷ்டரை வணங்குவார். சீதைக்கும் வேதங்களை உபதேசிப்பார். ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிந்து வந்தார். மக்கள் மனதில் இராமர் நீங்காத இடத்தை பிடித்தார். இராமரும் அயோத்தியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

🌸 ஒருநாள் காலை தசரதர் நீராடிவிட்டு கண்ணாடி முன் நின்று தலைமயிரை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தபோது காதில் அருகில் நரைமுடியைக் கண்டார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தசரதர், உனக்கு முதுமை வருகின்றது. முதுமை வந்தால் மரணம் வரும். மரணம் வருமுன் இறைவனுடைய சரணத்தை அடையவேண்டும். இத்தனைக் காலம் மக்களுக்கு உழைத்தாய். இனி, உன் உயிருக்கு உழைப்பாய் என்று நரைமுடி எச்சரிக்கை போல் இருந்தது. மரணத்திற்கு முன் கானகம், முக்தியை அடைய வேண்டும் என்று விரும்பினார். இராமருக்கு விரைவில் முடிசூட்டி விட்டு சீக்கிரம் துறவறம் மேற்கொள்ள விரும்பினார்.



No comments:

Post a Comment