மத்துவர் அல்லது மத்வர் என்ற மத்வாச்சாரியார் (Madhvacharya, 1238 – 1317) இந்தியாவின் மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை பரப்பிய இராமானுஜரும் ஆவர். மத்வர், துவைதம் என்ற சித்தாந்த தத்துவ இயலை நிலைநாட்டினார்.
மத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகா மாகாணத்தில் உடுப்பிக்கருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 8வது வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் பூர்ணப் பிரக்ஞர். மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல்பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார். அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் தன்னை ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார்.
பிரம்மத்தையும் ஆன்மாவையும் இரண்டு வேறு வேறு தத்துவங்களாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவ கூற்றுகளுக்கு இந்தப் பெயர் நிலைத்தது. உண்மையில் இந்த வேதாந்தத்தில் இன்னும் சில தத்துவங்கள் வேறுபடுத்திச் சொல்லப்படுகின்றன. அதன்படி ஐந்து வேற்றுமைகள் நிரந்தரமானவை.
அவை:
பிரம்மமும் ஆன்மாக்களும்
ஆன்மாவும் ஆன்மாவும்
பிரம்மமும் உலகும்
ஆன்மாவும் உலகும் மற்றும்
உலகிலுள்ள பொருளும் பொருளும்.
இவ்வைந்து வேற்றுமைகளைத் தத்துவக் கண் கொண்டு ஆராய்ந்தால், பிரம்மம் என்று அழைக்கப்படும் நாராயணன் அல்லது கடவுள் தத்துவத்தில் இரண்டு அடிப்படை வேற்றுமைகளை இப்படியும் பாகுபடுத்தலாம். ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவர்களின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம். இதை வடமொழியில் ஸ்வகத பேதம் என்பர். அதாவது ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமை’. கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள வேற்றுமையோ இரு பகுப்புகளுக்குள் (Categories) இருக்கும் வேற்றுமை. இவ்வேற்றுமையை விஜாதீய பேதம் என்பர். மரத்திற்கும் வேறு பகுப்பைச்சேர்ந்த மலைக்கும் உள்ள பகுப்பு வேற்றுமை போல. இவ்விரண்டு அடிப்படை வேற்றுமைகளை முன் நிறுத்தியே மத்வரின் தத்துவ இயல் விரிவாக்கம் செயல்படுகிறது. அதனாலும் அவருடைய தத்துவம் துவைத-தத்துவம் என்று பெயர் பெறுகிறது. இராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இவ்வேற்றுமை விஷயத்தில் முதலில் சொன்ன ‘தன்னுள்ளிருக்கும் வேற்றுமையை’ ஒப்புக்கொள்கிறது. ஆனால் இரண்டாவது வேற்றுமையை ஒப்புக்கொள்கிறதில்லை. ஆதி சங்கரரின் அத்வைதமோ இரண்டு வேற்றுமைகளையுமே ஒப்புக்கொள்வதில்லை.
மத்வருடைய வேதாந்தக்கொள்கையை ‘துவைதம்’ (இரண்டுள்ளது) என்று அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் உண்டு. கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை ‘துவைதம்’ என்று கூறப்படுகிறது
மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றிய விவரங்கள் அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் உள்ளன. அவையெல்லாவற்றிலும் முக்கியமான ஒன்று சரித்திரப்பிரசித்தி பெற்றது.
ஒரு சமயம் உடுப்பிக்கருகில் கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் ஆபத்துக்குள்ளாகியது. கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியை காற்றில் வீசிக்காட்டி என்னமோ செய்தார். கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. கப்பலின் தலைவர் அவரை வணங்கி, அவரை தன்னிடமிருந்து ஒரு பரிசு வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையை விட்டு சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர். தானே அந்தப் பாரமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்றார். அதுதான் இன்றும் உடுப்பி கோயிலில் மூலவிக்கிரகமாக உள்ளது.
அவ்விக்கிரகத்தைப்பற்றி அவர் வெளிப்படுத்திய தகவல் இன்னும் பெரிய விந்தை. ‘விஸ்வகர்மா என்ற தெய்வச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பிற்பாடு துவாரகை மூழ்கியபோது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’! பஞ்சபாண்டவர்களின் வனவாச சமயம் அவர்களைக் காண அடிக்கடி தேடிச் சென்றதால் அவர் வெளியே செல்லும் நாட்களில் பாதபூஜை செய்ய முடியாது ருக்மிணி தேவி வருந்தியதால் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ருக்மிணி தேவி விரும்பி வேண்டிய வடிவான, அன்னை யசோதையின் தயிர் கடையும் மத்தை பிடுங்கிக் கொண்டு ஓடும் தன் சிலா ரூபத்தை வடித்துத் தர கிருஷ்ணர் இட்ட கட்டளையின்படி விஷ்வகர்மா செய்த திருவுருவே அது.துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத போது துவாரகை வந்த மகான்கள், மக்கள் அனைவரும் வழிபட்ட உருவம் அது. துவாரகை கடலில் மூழ்கிய போது ருக்மிணி தேவி வழிபட்ட அந்த விக்கிரகமும் கடலில் மூழ்கி பல ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர் மத்வர் கையில் வெளிப்பட்டது.
கிபி 1317-ம் வருடம், மாக மாத, சுத்த நவமியன்று, தனது சிஷ்யர்களுக்கு ஐத்ரேய உபநிஷத்தின், தாத்பர்யத்தை விளக்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது பல்வேறு வகையான சுகந்தப் புஷ்பங்கள் பொழிந்து அவரை மூடிக் கொண்டன.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, அவருடைய சிஷ்யர்கள் அந்த புஷ்பங்களை விலக்கிப் பார்த்த போது, ஸ்ரீ மத்வர் அங்கு காணப்படவில்லை! அவர் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு மறைந்திருந்தார்.
ஸ்ரீமத்வருக்குப் பின், அவரைப் பின்பற்றி பல்வேறு சக்திவாய்ந்த மகான்கள் அவதரித்தனர், அவர்களில் ஒருவரே தமிழ்நாடு புவனகிரியில் பிறந்து, கும்பகோணத்தில் சந்நியாச வாசம் செய்து, மந்த்ராலயத்தில் ஜீவ ப்ருந்தாவனம் அடைந்த அற்புத மகான் ஸ்ரீராகவவேந்திரர் ஆவார்.
No comments:
Post a Comment