Pages

Wednesday, December 22, 2021

ஆன்மீக தகவல் - பஞ்சரங்க தலங்கள்

 பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின்  கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள்படும்.



1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் ,  மாண்டியா மாவட்டம் , கர்நாடக மாநிலம்

 சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டிக் கொண்டார். இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கங்கர் வம்ச அரசர்களால் கட்டப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஹோய்சாள மற்றும் விசயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

2. மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம் , திருச்சிராப்பள்ளி மாவட்டம்

 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய ஒரு சுயம்புத் தலம். இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம். இதை அனந்தரங்கம் என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.

3. அப்பாலரங்கம் - கோவிலடி, தஞ்சாவூர் மாவட்டம்

இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படும் இந்த திவ்யதேசம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்) என்ற பெயர் வழங்கலாயிற்று. இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலமாகும்.

4.சதுர்த்தரங்கம் - கும்பகோணம் , தஞ்சாவூர் மாவட்டம்

பஞ்சரங்க தலங்களில் சதுர்த்தரங்கம் என்று சொல்லப்படும் சாரங்கபாணி கோவில், காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று - இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சன்னதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில்லும் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள் புரிகிறார். எனவே இவர் சாரங்கபாணி என்று பெயர் பெற்றுள்ளார் இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார்கள்.

5. பஞ்சரங்கம் - திருஇந்தளூர் , மயிலாடுதுறை மாவட்டம்

சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப்பெயர் பெற்றது.வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து வழிபாடு செய்கினறனர்.

No comments:

Post a Comment